சிலப்பதிகாரம் ''வேட்டுவ வரி''

அஃதாவது -
வேட்டுவர்கள் கொற்றவையை வழிபாடு செய்து வாழ்த்திய வரிப்பாடல் என்னும் இசைத்தமிழ்ப் பாடல்களையுடைய பகுதி என்றவாறு. இதன்கண் கொற்றவையின் புகழ்பாடும் மறவர்கள் கூத்துமாடிப் பாடுதலாலே இது வரிக்கூத்து என்னும் நாடகத் தமிழுமாம் என்க.
இனி, இதன்கண் கோவலன் கண்ணகி கவுந்தியடிகள் ஆகிய மூவரும் இளைப்பாறி யிருத்தற் பொருட்டு அப் பாலைப் பரப்பில் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் நடுவணமைந்த கொற்றவை கோட்டம் புகுந்து ஆங்கொரு சார் இருந்தபொழுது அப்பாலைப் பரப்பில் வாழும் எயினர் சாலினியைக் கொற்றவைக்குரிய கோலங் கொள்வித்து அக் கோட்டம் புகுவாராக; தேவராட்டியாகிய சாலினிமேல் தெய்வம் ஏறி அடிபெயர்த்தாடிக் கண்ணகிமுற் சென்று அவனைப் பாராட்டுதலும் எயினர்கள் அத் தெய்வத்தைப் பரவிப்பாடும் இசைப்பாடல்களும் கற்போர்க்குக் கழிபேரின்பஞ் செய்வனவாம்.



கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி
ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த் தாங்கு
ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை
வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால்  5
வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்  10
நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்
கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும்  15
கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது  20
சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச்
சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி
இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது  25
முளைவெண் திங்க ளென்னச் சாத்தி
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீஇப் பரிவொடு  30
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்குந் தந்தனர் பரசி  35
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும்  40
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்
கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி
இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்  45
கணவனோ டிருந்த மணமலி கூந்தலை
இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்  50
பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்  55
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி  60
கரியின் உரிவை போர்த் தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்  65
தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை  70
ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை
தமர்தொழ வந்த குமரிக் கோலத்து
அமரிளங் குமரியும் அருளினள்
வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே;
 - உரைப்பாட்டுமடை.

வேறு

நாகம் நாறு நரந்தம் நிரந்தன   1
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே;
செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்  2
கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே;
மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்  3
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே;

வேறு

கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப்  4
பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ
பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த
விற்றொழில் வேடர் குலனே குலனும்;
ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப்  5
பையர வல்குல் தவமென்னை கொல்லோ
பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த
எய்வில் எயினர் குலனே குலனும்;
பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ்  6
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ
ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
வேய்வில் எயினர் குலனே குலனும்;

வேறு

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்  7
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;
வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்  8
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்;
சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்  9
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;

வேறு

ஆங்குக்,    10
கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு
அசுரர் வாட அமரர்க் காடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;

வேறு

ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப  11
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின்
காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்;
உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை  12
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்;
கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப்  13
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்

வேறு

இளமா எயிற்றி இவைகாண் நின் னையர்  14
தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன;
முருந்தேர் இளநகை காணாய்நின் னையர்  15
கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன;
கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர்  16
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;
- துறைப்பாட்டுமடை.

வேறு

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்  17
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே;
அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு  18
மணியுரு வினைநின மலரடி தொழுதேம்
கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது
நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே;
துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய  19
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
படுகடன் இதுவுகு பலிமுக மடையே;

வேறு

வம்பலர் பல்கி வழியும் வளம்பட  20
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
சங்கரி அந்தரி நீலி சடாமுடிச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்;
துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு  21
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்;
பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும்  22
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்;

வேறு

மறைமுது முதல்வன் பின்னர் மேய  23
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே.
















Category: 2 comments

2 comments:

Information said...

மிக்க நன்று

Pandiyan Ramasamy Gounder said...

Thanks for this information. 🙏

Post a Comment